Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 03 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் சென்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ராஜீவ் காந்தியின் கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழக அரசின் கூட்டணியில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கலைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளோம்.
இனி தமிழ்நாட்டின் நலனுக்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.
மேலும், கர்நாடகாவில் அரசியல் கட்சிகள் மாநில நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவது போல, தமிழ்நாட்டிலும் அனைத்து கட்சிகளும் மாநில நலனுக்காக ஒன்றிணைய வேண்டும். மேகதாது விவகாரத்தில் பிரதமர் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யக் கூடாது. தமிழகத்தின் நிலைப்பாட்டை பிரதமரிடம் தமிழக பாஜக எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தவெக குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறிய 'வாஷிங் மெஷின்' விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், கனிமொழி தங்கள் கட்சி நிகழ்ச்சியில் சுற்றிப் பார்த்தாலே யார் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும். அவர்களது கட்சிக்கும் வாஷிங் மெஷின் தேவைப்படுகிறது என்று விமர்சித்தார்.
தவெக எம்.எல்.ஏ. ஒருவர் கட்சி மாற பணம் கொடுத்து பேரம் பேசியதாக அளித்துள்ள புகார் குறித்து கருத்து தெரிவித்த அவர்,
அந்தப் புகார் வரவேற்கத்தக்கது. காவல்துறை நியாயமான முறையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்தால் அது எதிர்காலத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam