Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச)
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவு வார விழா–2026 முன்னிட்டு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மற்றும் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் இணைந்து மாநில அளவிலான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் கலந்து கொண்டு கூட்டுறவுக் கொடியை ஏற்றி, உறுதிமொழி ஏற்று விழாவைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் காந்திராஜ்,
உலகிலேயே மிகப்பெரிய கூட்டுறவு கட்டமைப்பாக தமிழ்நாடு திகழ்வதாகவும், இந்தியாவில் கூட்டுறவுத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அடிமட்ட கூட்டுறவுச் சங்கங்களை மேலும் வலுப்படுத்தி, கிராமப்புற பொருளாதாரத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை என்றும், நோ கமிஷன், நோ கரப்ஷன் என்ற கொள்கையுடன் அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறினார்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற ரூ.75 ஆயிரம் வரை பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்திராஜ்,
கூட்டுறவு சங்கங்கள் மூலம் 77 பேருக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ