Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 03 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் குடிபோதை மற்றும் மனநல மறுவாழ்வு மையத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காப்பகத்தில் இருந்தவர்கள் தனது மகனை தாக்கி கொலை செய்ததாக சிறுவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜி கேர் பவுண்டேஷன் என்ற மறுவாழ்வு மையத்தில், குடிபோதை பழக்கத்தில் இருந்து மீள முடியாதவர்களுக்கும், மனநல ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கும் சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த சாந்த பிரபுவின் 17 வயது மகன் ரத்தினசாமி, வீட்டில் பைக் வாங்கித் தருமாறு வற்புறுத்தி வந்ததுடன், மனஅழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவருக்கு மனநல ஆலோசனை வழங்கும் நோக்கில் கடந்த ஜூன் 9-ஆம் தேதி விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஜி கேர் பவுண்டேஷன் மறுவாழ்வு மையத்தில் தந்தை சேர்த்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, மறுவாழ்வு மைய நிர்வாகத்தினர் அவரை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த சிறுவனின் தந்தை சாந்த பிரபு, தனது மகனின் இரு கைகளிலும் கயிறு கட்டிய தடயங்கள் இருந்ததுடன், கைகளில் ரத்தக் காயங்களும் இருந்ததாக கூறினார்.
மேலும், காப்பகத்தில் இருந்தவர்கள் தனது மகனை தாக்கி கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி, மறுவாழ்வு மைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam