Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 03 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி பகுதியில் காளிமுத்து (வயது 48) என்பவர் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அவரது தலையை மட்டும் வெட்டி எடுத்த மர்ம கும்பல், 5 கிலோ மீட்டர் தூரத்தில் கல்லிடைக் குறிச்சி அருகே கரம்பை நெடுஞ்சாலையில் வைத்து விட்டு சென்றது.
இந்த சம்பவத்தின் போது காளிமுத்து வந்த இரு சக்கர வாகனத்தின் மீது காரை கொண்டு பலமாக மோதியதில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுவன் சின்னதுரை (வயது 15) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு, எஸ்.பி விஸ்வேஷ் பாலசுப்பிரமணி சாஸ்திரி ஆகியோர் இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். தடவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும் மூலச்சி கிராம மக்களிடம் நடத்திய விசாரணையில், ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களிடையே இருந்த முன்பகையால் நடைபெற்ற மோதல் காரணமாக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து ஊர்மக்கள் கூறுகையில்,
காளிமுத்து மற்றும் பெருமாள் பாண்டியன் ஆகிய இரு தரப்பினரிடையே 2007ஆம் ஆண்டிலிருந்தே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
இதில் கடந்த 2012 ஆம் ஆண்டு பெருமாள் பாண்டியன் கொலை செய்யப்பட்டார். அப்போது அவரது தலையை துண்டித்து கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை பகுதியில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இந்த பகை தொடர்ந்து வந்த நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த குரோதம் அடங்குவதற்குள், வெளியூரில் வசித்து வந்த காளிமுத்து 2 மாதங்களுக்கு முன்பு தான் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
பழைய கணக்கை தீர்க்கும் நோக்கில் பெருமாள் பாண்டியன் தரப்பினர் காளிமுத்துவை நோட்டமிட்டு வந்த நிலையில், நேற்று அவரை கொடூரமாக கொலை செய்து தலையை வெட்டி எடுத்து வந்து, ஊருக்குள் வலம் வந்துள்ளனர்.
மேலும், ஊரிலிருந்த பெண்களிடம் காளிமுத்துவின் தலையை காண்பித்து, பெருமாள் பாண்டியனை போன்று உங்களுடைய ஆளையும் கொலை செய்து விட்டோம் என்று காட்டியபடி சென்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விபத்தை நேரில் கண்ட சிறுவன் சின்னதுரை போலீசாரிடம் சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாங்கள் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தோம்.
அப்போது, ஒரு கார், 8 பைக்குகள் திடீரென வந்து எங்களை வழிமறித்தன.
வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது. மொத்தம் 25 பேர் வந்திருந்தனர். அவர்கள் எங்களை சரமாரியாக வெட்டினார்கள் என்று சின்னதுரை வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை சம்பவம் குறித்து காளிமுத்துவின் உறவினர் கூறுகையில்,
10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த பெருமாள் என்பவரின் மகன் பட்டு மற்றும் அவரது நண்பர்களான மகேஷ், கிட்டு, மகாலிங்கம், மகேந்திரன் உள்ளிட்ட இளைஞர்கள் கூலிப்படையுடன் வந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காளிமுத்துவின் தலையை துண்டித்து மூலச்சி கிராமத்துக்குள் கொண்டு சென்று அங்குள்ள பெண்களிடம் காட்டி மிரட்டியதில், அவர்கள் பயந்து போய் வீட்டு கதவுகளை பூட்டி உள்ளே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இக்கொலை குறித்து போலீசார் கூறுகையில்,
ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் மோதல்போக்கு நீடித்து வந்த நிலையில் இது போன்ற கொலை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
முதலில் சுப்பிரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து அதற்கு பழிவாங்கும் நோக்கில் பெருமாள் மற்றும் பாபநாசம் ஆகிய இருவர் காரை வைத்து மோதி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றதாக தெரிகிறது.
இந்த சம்பவத்திற்கு பழிக்கு பழியாகவே காரை வைத்து மோதி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் மகன் ஜெயராஜ் ஆகிய இருவரையும் கொலை செய்துள்ளனர்.
கடந்த கொலை சம்பவங்களில் காளிமுத்துவிற்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்றாலும் தற்போது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பெருமாள் பாண்டியனின் இரண்டு மகன்கள் மற்றும் அவரது மருமகன் என மொத்தம் மூன்று பேர் ஈடுபட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN