Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 03 ஜூலை (ஹி.ச.)
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே கே.பெரியபட்டி பிரிவு சாலை சந்திப்பு, திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த சாலையை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
மேலும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் போராட்டத்தால் திருச்சி-திண்டுக்கல் மார்க்கத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேம்பாலம் அமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.
Hindusthan Samachar / vidya.b