Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
சென்னை சைதாப்பேட்டை குமரன் காலனி மற்றும் நாகப்பா தெரு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 9 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை நீடித்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தொடர்ந்து ஏற்பட்ட மின்துண்டிப்பால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சைதாப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஐந்து நாட்களாகவே இப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், அதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
குறிப்பாக, நேற்று இரவு சுமார் 7 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் முதியவர்கள், நோயாளிகள், கைக்குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும், புகாருக்காக வழங்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு அழைத்தபோது பதில் கிடைக்கவில்லை என்றும், சில எண்கள் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
அவசரத்திற்கு மட்டும் அழையுங்கள் என்று கூறப்படுவதால், மின்வெட்டு அவசர பிரச்சினை இல்லையா என மக்கள் கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நீடித்தால், நாளை காலை சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், சைதாப்பேட்டை சம்பவம் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam