Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 3) 2-வது நாளாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அறிவிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனையின் முதல் கட்டமாக நேற்று உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
ஒவ்வொரு துறையின் தேவைகள், முன்னுரிமைத் திட்டங்கள் மற்றும் நிதித் தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான இந்த ஆலோசனைகள் ஜூலை 22-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் நடைபெறும் இந்தக் கூட்டங்களில், புதிய திட்டங்கள், நடைபெற்று வரும் பணிகளுக்கான நிதி, மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒதுக்கீடுகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது.
இதனையடுத்து, த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான தமிழ்நாடு பட்ஜெட், இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பட்ஜெட் மூலம் அரசின் வளர்ச்சி நோக்கு, தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் புதிய மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P