Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார் உரிமத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பது தொடர்பாக வருகிற திங்கள்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மது விலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துறை உயரதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் போர்டு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் உரிமத்தின் காலக்கெடு கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து புதிய டெண்டர் நடைமுறைகள் நிறைவடையாததால், பல இடங்களில் டாஸ்மாக் பார்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இருப்பினும், மதுபான சில்லறை விற்பனை வழக்கம்போல டாஸ்மாக் கடைகள் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், தற்போதைய டெண்டர் உரிமத்தை இடைக்கால ஏற்பாடாக மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதா அல்லது புதிய டெண்டர் நடைமுறைகளை விரைவுபடுத்துவதா என்பது குறித்து திங்கள்கிழமை நடைபெறும் ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், டாஸ்மாக் பார் செயல்பாடு, உரிமம் நீட்டிப்பு மற்றும் அடுத்தகட்ட டெண்டர் நடைமுறைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P