கனமழை எதிரொலி - கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று ஒருநாள் தடை
கோவை, 03 ஜூலை (ஹி.ச.) கோவை குற்றாலம் அருவி என்பது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மிகச்சிறந்த இயற்கை சுற்றுலாத் தலமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி, அடர்ந்த காடுகள் மற்றும் குளிர்ந்த சூழலுக்குப் புகழ்பெற்றது ஆக
கனமழை எதிரொலி - கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல  இன்று ஒருநாள் தடை


கோவை, 03 ஜூலை (ஹி.ச.)

கோவை குற்றாலம் அருவி என்பது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மிகச்சிறந்த இயற்கை சுற்றுலாத் தலமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி, அடர்ந்த காடுகள் மற்றும் குளிர்ந்த சூழலுக்குப் புகழ்பெற்றது ஆகும்.

இந்த அருவியானது கோயம்புத்தூர் மாநகரிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள சாடிவயல் பகுதியில் அமைந்துள்ளது.

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், தமிழக வனத்துறையின் நேரடி கண்காணிப்பில் பராமரிக்கப்படுகிறது.

தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பதிவாகியுள்ள அதீத மழைப்பொழிவால் அருவிக்கு வரும் நீர்வரத்து அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையத்தை இன்று ஒரு நாள் முழுவதும் மூட வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

அருவிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், மீறி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நீர்வரத்து சீரான பின்னரே அருவி மீண்டும் திறக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சுற்றுலாப் பயணிகள் மாற்றுத் திட்டங்களை மேற்கொள்ளுமாறும், வானிலை நிலவரத்தை அறிந்து பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Hindusthan Samachar / vidya.b