தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கு - கார்ப்பரேட் நிறுவனம் ரூ.180 கோடி ஒதுக்கியதாக கைதானவர்கள் வாக்குமூலம்
சென்னை, 03 ஜூலை (ஹி.ச.) தவெக எம்.எல்.ஏ.க்களிடம் கட்சி மாற பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசுவதற்காக முதற்கட்டமாக ரூ.180 கோடி வ
காவல்


சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)

தவெக எம்.எல்.ஏ.க்களிடம் கட்சி மாற பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,

கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசுவதற்காக முதற்கட்டமாக ரூ.180 கோடி வரை ஒதுக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அங்கு எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், சென்னையைச் சேர்ந்த ஒரு தவெக எம்.எல்.ஏ. உள்பட பல்வேறு எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு பேரம் பேச முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், சுமார் ஒரு வாரம் திட்டமிட்டு செயல்பட்டதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் வெளியில் கசிந்ததைத் தொடர்ந்து, நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் பாதியிலேயே திட்டத்தை கைவிட்டு அங்கிருந்து வெளியேறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய கார்ப்பரேட் நிறுவனத்தை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும், அதன் நிர்வாகிகளை விரைவில் விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய மற்ற நபர்களை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam