Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 03 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டம் கர்கேகண்டி பாலாறு பள்ளம் வனப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கர்கேகண்டி பாலாறு பள்ளம் அருகே வனப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தேவராஜ், ஆனந்தராஜு மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து இரண்டு ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பழமையானவையா, அவற்றின் மதிப்பு எவ்வளவு, எங்கிருந்து கடத்தி வரப்பட்டன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் சிலை கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு-கர்நாடக எல்லையோர வனப்பகுதிகளில் சிலை கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b