Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 30 ஜூலை (ஹி.ச.)
திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வைகுண்டம் கியூ காம்ப்ளெக்ஸில் உள்ள அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பியுள்ள நிலையில், டோக்கன் பெறாத பக்தர்கள் வெளிப்புற வரிசைகளில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அதிகாரிகள் கூறுகையில், தற்போது சர்வதரிசனத்திற்கு சுமார் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், பால், சிற்றுண்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினர்.
புதன்கிழமை மட்டும் 74 ஆயிரத்து 471 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.
அவர்களில் 31 ஆயிரத்து 319 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அதேபோல், பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மூலம் ஒரே நாளில் கோவில் உண்டியலில் ரூ.4.68 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்து வருவதால், தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA