Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச)
மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் கிங் நிலைய வளாகத்தில் ரூ.338.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 'நலம்AI' செயலி மூலம் நோயாளிகள் பதிவு செய்யும் நடைமுறையை ஆய்வு செய்த அமைச்சர், பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் செயலியில் எளிதாக பதிவு செய்ய வழிகாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
பின்னர் புறநோயாளிகள் பிரிவு மற்றும் நரம்பியல் பிரிவுகளை பார்வையிட்ட அவர், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளிடமும் மருத்துவ சேவைகள் தொடர்பாக கருத்துகளை கேட்டார்.
புறநோயாளிகள் பிரிவில் கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து கூடுதல் கழிவறை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போதுள்ள கழிவறைகளை எப்போதும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை கோரிய நோயாளிக்கு உடனடியாக அட்டை வழங்க மருத்துவக் காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கிங் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தரநிலைகளை கண்டிப்பாக பின்பற்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்ய ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.
ரூ.338.70 கோடி மதிப்பீட்டில் 6.50 ஏக்கர் பரப்பளவில், 4.63 லட்சம் சதுர அடியில் உருவாகும் இந்த மருத்துவமனை வளாகம் மூன்று பிரிவுகளாக அமைக்கப்படுகிறது. இதில் அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை, கதிரியக்கப் பிரிவு, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகள், சிறப்பு வார்டுகள், முதுகலை மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான விடுதிகள், பேராசிரியர் குடியிருப்புகள், உணவகம் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெறவுள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ