Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரபிரதேசம், 30 ஜூலை (ஹி.ச.)
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் நிதி நிர்வாகம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பக்தர்களின் நம்பிக்கையையும் பக்தியையும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் துரோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், ரகசிய நன்கொடைகளில் பெருமளவில் மோசடி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், நன்கொடைகளுக்கு முறையான ரசீதுகள் வழங்கப்படவில்லை அல்லது போலி ரசீதுகள் வழங்கப்பட்டதாகவும், அயோத்தியில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி பின்னர் அவற்றை பல மடங்கு அதிக விலைக்கு கோவில் அறக்கட்டளைக்கு விற்று மத நிதி கொள்ளையடிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
நில பரிவர்த்தனைகளில் கிடைத்த முறைகேடு லாபம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும், எதிர்ப்பு தெரிவித்த நேர்மையான நபர்கள் நீக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு பதிலாக ஊழல் தொடர்புடையவர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திருடப்பட்டதாகக் கூறப்படும் தொகை மீட்கப்பட்டதாக எந்தப் பதிவும் இல்லை என்றும், விசாரணையில் குறிப்பிடத்தக்க எதுவும் இல்லை என்று கூறி உண்மைகள் மறைக்கப்பட்டதாகவும், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.
விசாரணைக்கு உட்பட்டவர்களே விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டதாகவும், அறக்கட்டளையின் உயர் அதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 'க்ளீன் சிட்' வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், கோவிலின் நிதி மற்றும் மதிப்புமிக்க உலோகங்கள் மூட்டைகளில் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இத்தகைய நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை என்றும், பொதுமக்களின் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது ஒவ்வொருவரின் கடமை என்றும் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார்.
அத்துடன், பாஜகவுடன் கூட்டணியில் இருப்பவர்கள் ராமரைத் துரோகம் செய்தவர்களும், மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்தவர்களும் ஆவர் என்றும் அவர் விமர்சித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P