Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)
கலை என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான ஊடகம் மட்டுமல்ல; சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வலிமையான கருவி என்பதைக் நிரூபிக்கும் வகையில், எய்ம் ஃபார் சேவா சார்பில், சென்னையில் நிதி திரட்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி, மன வளர்ச்சிக் குறைபாடுகளுடன் வாழும் வயது வந்த ஆண்களுக்காக செயல்பட்டு வரும் 'சுவாமி தயானந்தா க்ருபா கேர்' மையத்திற்கு வழங்கப்பட்டது.
10 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் இந்த மையம், பாதுகாப்பான தங்குமிடம், தொழிற்பயிற்சி, சத்தான உணவு, மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட முழுமையான சேவைகளை வழங்கி, அங்குள்ளவர்களின் திறன்களை வளர்த்து, தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை, அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஷீலா பாலாஜி வரவேற்றார். தொடர்ந்து டாக்டர் கிரிதர், க்ருபா கேர் மையத்தின் சேவைகள் மற்றும் சமூகப் பணிகளை விளக்கினார். அமெரிக்க செயல்பாட்டு தலைமை அதிகாரி ஸ்ரீனிவாசன் ராமன், சேவைப் பணிகளை மேலும் விரிவுபடுத்த பொதுமக்களின் ஆதரவு கேட்டு வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் மையத்தின் பணிகளுக்கு ஆதரவாக தங்களது பங்களிப்புகளை வழங்க முன்வந்தனர்.
மாலையின் முக்கிய அம்சமாக, புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான ஷிஜித் நம்பியார் மற்றும் பார்வதி மேனன் வழங்கிய ராதா - பக்தியின் உருவகம் என்ற பரதநாட்டிய அரங்கேற்றம் அமைந்தது.
பிரவீன் கோத்கிந்தி புல்லாங்குழல், அனூர் வினோத் ஷ்யாம் மிருதங்கம், சாய் வம்ஷி தாள வாத்தியம் இசைத்தனர். குரல் இசை, நட்டுவாங்கம் போன்ற வழக்கமான கூறுகள் இன்றி, புல்லாங்குழல் இசையை மையமாகக் கொண்டு முழு நடனமும் வடிவமைக்கப்பட்டது.
இசை, தாளம், அசைவு என மூன்றின் சங்கமமாக இந்த நடனம், பாரம்பரியக் கலையை ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
பரதநாட்டிய அரங்கேற்றம் என்றாலே குரல் இசை, நட்டுவாங்கம், வயலின், மிருதங்கம் என பல்வேறு இசைக் கருவிகளின் ஒருங்கிணைப்பே நினைவுக்கு வரும்.
ஆனால், ராதா - பக்தியின் உருவகம் அந்த மரபை மதித்தபடியே, புல்லாங்குழலை முழு நிகழ்ச்சியையும் தாங்கிச் செல்லும் பிரதான கலைக் குரலாக மாற்றி, புதிய கலை மொழியை உருவாக்கியது. கிருஷ்ணனின் அடையாளமாக விளங்கும் புல்லாங்குழலையே, அவரது வாழ்க்கைப் பயணத்தைச் சொல்லும் ஊடகமாக மாற்றியிருந்தது இந்த நிகழ்ச்சியின் தனிச்சிறப்பாக அமைந்தது.
பிரவீன் கோத்கிந்தியின் புல்லாங்குழல் இசை, வெறும் மெட்டுகளை மட்டும் இசைக்காமல், கதையின் ஒவ்வொரு உணர்வையும் உயிர்ப்புடன் வெளிப்படுத்தியது. தேஷ், பீம்பலாஸ், யமன் உள்ளிட்ட பல ராகங்களில் அவர் உருவாக்கிய இசை, ராதையின் காதல், கிருஷ்ணனின் குறும்பு, பிரிவின் வேதனை, இறுதியில் இருவரின் ஆன்மிக சங்கமம் என ஒவ்வொரு உணர்வையும் ரசிக்க வைத்தது.
அவருக்கு துணையாக மிருதங்கக் கலைஞர் அனூர் வினோத் ஷ்யாம் மற்றும் தாள வாத்தியக் கலைஞர் சாய் வம்ஷி ஆகியோர் தங்களது துல்லியமான லயப் பங்களிப்பால் நிகழ்ச்சிக்கு வலிமை சேர்த்தனர்.
குறிப்பாக, நடனத்தின் நிருத்தப் பகுதிகளில் அவர்கள் வாய்மொழியாக உச்சரித்த ஜதிகளும், தாள அமைப்புகளும் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தன.
ஜதிகளின் முடிவில் தா... ரா... என்ற ஒலிகளைச் சாமர்த்தியமாக இணைத்து, ராதா என்ற சொல்லாக ஒலிக்கச் செய்த விதம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கலாக்ஷேத்ரா மரபில் பயிற்சி பெற்ற ஷிஜித் நம்பியாரும், பார்வதி மேனனும், பாரம்பரிய பரதநாட்டிய இலக்கணத்தை முழுமையாகக் கடைப்பிடித்தபடியே, அதற்குள் புதிய சிந்தனைகளைப் புகுத்தினர். ஆடம்பரமான மேடை அலங்காரங்களோ, தேவையற்ற பொருட்களோ இன்றி, நடனமே மையமாக இருக்க வேண்டும் என்ற தெளிவான கலைக் கொள்கை அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டது.
ராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையேயான உறவை, கிருஷ்ணரின் பிறப்பு முதல் இருவரின் ஆன்மிக ஒன்றிணைவு வரை கலைநயத்துடன் அவர்கள் சித்தரித்தனர்.
பார்வதி மேனன், குறும்பான சிறுமியிலிருந்து கிருஷ்ணரின் மீது ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்ட ராதையாகவும், இறுதியில் தன் அன்பருடன் இணைய ஏங்கும் ஆன்மிக உருவமாகவும் மாறி சிறப்பாக நடித்தார்.
ஷிஜித் நம்பியார், சிறுவன் கிருஷ்ணர், இளம் கிருஷ்ணர், இறுதியில் பகவான் கிருஷ்ணர் எனப் பல பரிமாணங்களைத் தனது அபிநயமும் நிருத்தமும் மூலம் திறம்பட வெளிப்படுத்தினார்.
எளிமை, இசை, லயம், அபிநயம், உணர்வு ஆகிய அனைத்தையும் சமநிலைப்படுத்திய இந்த அரங்கேற்றம், வழக்கமான பரதநாட்டிய நிகழ்ச்சிகளிலிருந்து தனித்துவமான கலை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது.
Hindusthan Samachar / Durai.J