Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூர், 30 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி காவிரி நீரை திறந்துவிடுமாறு காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மழைப்பற்றாக்குறையால் அணைகளில் போதிய நீர் இல்லாததால் தண்ணீரை திறக்க முடியாது என்று கர்நாடக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பெங்களூருவில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ராமலிங்கரெட்டி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமலிங்கரெட்டி,
தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி நீரை 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவது எங்களுக்கு சாத்தியமில்லை.
இதற்கு எதிராக காவிரி நீர் நிர்வாக ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.
இதற்கான வரைவு மனு தயாரிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள வழக்கறிஞரிடம் அனுப்பப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுவை எங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்வார் என்றார்.
மேலும், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை.
எங்களின் மேல்முறையீட்டை காவிரி நீர் நிர்வாக ஆணையம் ஏற்காவிட்டால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam