Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 30 ஜூலை (ஹி.ச.)
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) உத்தரவிட்ட பிறகும் தமிழ்நாட்டுக்கான நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவையும் மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசின் போக்கு தமிழர் விரோதமானது மட்டுமல்ல, ஒழுங்காற்றுக் குழுவையே அவமதிக்கும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கர்நாடக அரசின் பிடிவாதத்தால் டெல்டா பகுதி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.
மேலும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரின் அளவில் மிகக் குறைவான நீரே இதுவரை வந்துள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் சுமார் 10 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி (கியூசெக்) நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக அரசு தானாக முன்வந்து தமிழ்நாட்டுக்கு நியாயம் செய்யும் என்ற நம்பிக்கைக்கு இனி இடமில்லை என்றும், தமிழ்நாட்டின் உரிமையை வலியுறுத்தும் வகையில் மாநில அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் தொல். திருமாவளவன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam