சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை, 30 ஜூலை (ஹி.ச.) சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க பணிகளை துரிதப்படுத்துமாறு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை மெட்ரோ 2-ம்
விஜய்


சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)

சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க பணிகளை துரிதப்படுத்துமாறு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டம் 118 கிலோமீட்டர் நீளத்தில், மாதவரம்–சிறுசேரி சிப்காட், மாதவரம்–சோழிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி–கலங்கரை விளக்கம் ஆகிய மூன்று வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

கட்டுமானப் பணிகளின் தரத்தை உறுதிப்படுத்தி, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், மெட்ரோ கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பகல் நேரத்துக்கு மாற்றாக இரவு நேரங்களில் கூடுதல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

பூந்தமல்லி–கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. போரூர் முதல் வடபழனி வரை ரயில் இயக்கத்திற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்திருந்தாலும், 6 நிலையங்களில் கட்டுமானம் இன்னும் நிறைவடையாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்தப் பணிகளை விரைந்து முடித்து பூந்தமல்லி–வடபழனி இடையே மெட்ரோ சேவையை தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

மேலும், மற்ற வழித்தடங்களிலும் பணிகளை துரிதப்படுத்தி, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தை குறித்த காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.

நேற்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு, கத்திப்பாரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், ஆளில்லா மெட்ரோ ரயில் இயக்கத்திற்கான முன்னேற்பாடுகள் மற்றும் கத்திப்பாரா கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை பாராட்டியதுடன், அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam