Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)
2026-ஆம் ஆண்டில் வலுவான எல் நினோ (El Niño) நிகழ்வால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிவியல் ரீதியாக கண்காணித்து, முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையின் கீழ் நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையரும், மாநில நிவாரண ஆணையருமான கூடுதல் தலைமைச் செயலாளர் செயல்படுவார்.
குழுவில் அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத் தலைவர் பேராசிரியர் எஸ். கண்மணி, ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் டாக்டர் பாலாஜி நரசிம்மன், WRI இந்தியாவின் டாக்டர் அறிவுடை நம்பி அப்பாதுரை, தமிழ்நாடு கிரீன் கிளைமேட் நிறுவனத்தின் டாக்டர் ரமேஷ் ராமச்சந்திரன், கடலோர மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர் டாக்டர் ஆர். வெங்கடேசன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஜே.கே. பாட்டர்சன் எட்வர்ட் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் ஆர். பிரதீப் ஜான் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிபுணர் குழு மாநிலத்தில் மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல், முன்எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
மேலும், எல் நினோவால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்ற விளைவுகளை சமாளிக்க தேவையான துறைவாரியான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள், பேரிடர் முன்னெச்சரிக்கை திட்டங்கள் மற்றும் நீண்டகால தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும்.
இந்த நிபுணர் ஆலோசனைக் குழு 2026–27 மற்றும் 2027–28 ஆகிய இரண்டு ஆண்டுகள் செயல்படும் என்றும், குழு உறுப்பினர்களுக்கு தற்போது அமர்வு கட்டணம் அல்லது பயணப்படி வழங்கப்படாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam