Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 ஜூலை (ஹி.ச.)
கோவை உக்கடம் பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட கோவை உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவரின் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சஹ்ரான் ஹாஷிம். இவருடன் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் உள்ளிட்ட சிலர் பேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்ததாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவை உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தி, ஐ.எஸ் பயங்கரவாத கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பியதாகவும், தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த ஆட்களை திரட்டியதாகவும் கூறி முகமது அசாருதீனை கைது செய்தனர்.
தற்போது அதே வழக்கின் நிதி பரிமாற்றம் மற்றும் பண மோசடி தொடர்பான கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
அசாருதீனுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்ததா, அந்த பணம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் ஆவணங்கள், வங்கி கணக்குகள், சொத்து விவரங்கள் குறித்து அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b