Enter your Email Address to subscribe to our newsletters

ஜப்பான், 30 ஜூலை (ஹி.ச.)
ஜப்பான் கடுமையான மக்கள்தொகை நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டின் பூர்வீக குடிமக்களின் எண்ணிக்கை கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்து 12 கோடிக்கும் கீழே குறைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டவர்களையும் சேர்த்து ஜப்பானின் மொத்த மக்கள்தொகை தற்போது 12 கோடியே 30 லட்சமாக உள்ளது. இது 2020-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை விட சுமார் 31 லட்சம் குறைவு.
இது 1920-ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் மிகப்பெரிய சரிவு என்று கூறப்படுகிறது.
இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு தான்.
ஜப்பான் அரசு குழந்தை பிறப்பை ஊக்குவிக்க பல்வேறு நிதி உதவிகள், குழந்தை பராமரிப்பு விடுப்பு நீட்டிப்பு, இலவச கல்வி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அவை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பிறப்புகளே பதிவாகியுள்ளன.
அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி 2025-ம் ஆண்டில் சுமார் 7 லட்சத்து 5 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன, இது தொடர்ந்து 10-வது ஆண்டாக பிறப்பு விகிதம் சரிந்து வருவதை காட்டுகிறது.
ஆரம்ப மதிப்பீடுகளில் இந்த எண்ணிக்கை 6 லட்சத்து 70 ஆயிரமாக குறிப்பிடப்பட்டது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளது.
தற்போது ஜப்பானில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்.
வேலை செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b