Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)
சென்னை கிண்டியில் நடைபெற்ற PLEXCONNECT 2026 தொழில்துறை மாநாட்டில், முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் உலகளாவிய திறன் மையம் (GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), மின்சார வாகனம், உயர்கல்வி மற்றும் அதிநவீன உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த மாநாட்டில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Chubb நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த Nordex நிறுவனமும் தமிழ்நாட்டில் முதன்முறையாக தங்களது மையங்களை அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டன. சென்னையில் Chubb நிறுவனம் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க முடிவு செய்ததன் மூலம் 220 பேருக்கும், Nordex நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க முடிவு செய்ததன் மூலம் 1,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம் மொத்தம் 1,220 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல்கலைக்கழகமான University of Western Australia (UWA), பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) 2023-ஆம் ஆண்டு ஒழுங்குமுறைகளின் கீழ், இந்தியாவில் தனது முதல் வளாகத்தை சென்னை வேளச்சேரியில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகமாக இது அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சுமார் 50,000 சதுர அடி பரப்பளவில், ரூ.125 கோடி முதலீட்டில் உருவாகவுள்ள இந்த வளாகத்தின் மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல், தொழில்துறை அமைச்சர் கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான MotiveLink, காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P