Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 30 ஜூலை (ஹி.ச.)
கர்நாடக அரசு, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுக்கு எதிராக காவிரி நீர் நிர்வாக ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்றுள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கர்நாடக பவனில் சட்ட நிபுணர்கள், அட்வகேட் ஜெனரல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் போதிய அளவு நீர் இருப்பு இல்லை என்பதால், அந்த உத்தரவை எதிர்த்து காவிரி நீர் நிர்வாக ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேல்முறையீடு
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக காவிரி நீர் நிர்வாக ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
அட்வகேட் ஜெனரல், சட்ட நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டுக்கான வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
என்னை சந்தித்து பேச தமிழக முதல்-அமைச்சர் விஜய், நமது தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் என்னுடன் தொலைபேசியிலும் பேசினார். அவருக்கு வழங்க வேண்டிய மரியாதையை வழங்கி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளேன்.
நமது மாநிலத்திற்கு வருவதாக தெரிவிக்கும் விருந்தினர்களை மரியாதையுடன் வரவேற்பது நமது கடமை. அவரை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
காவிரி அணைகள் அமைந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிடுமாறு விஜய்யிடம் கூறியுள்ளேன்.
அதற்குத் தேவையான ஹெலிகாப்டர் வசதியும் செய்து கொடுக்கப்படும்.
இங்குள்ள உண்மை நிலையை அவர் நேரில் அறிந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பார்க்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA