சபரிமலைக்கு நெய் வினியோகத்தில் ரூ.85.73 லட்சம் மோசடி
திருவனந்தபுரம் , 30 ஜூலை (ஹி.ச.) சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நெய் வினியோகம் செய்யப்பட்டதில் ரூ.85.73 லட்சம் அளவுக்கு மோசடி நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிவான விசாரணை நடத்த கேரள அர
A


திருவனந்தபுரம் , 30 ஜூலை (ஹி.ச.)

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நெய் வினியோகம் செய்யப்பட்டதில் ரூ.85.73 லட்சம் அளவுக்கு மோசடி நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிவான விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு முன்பு தனியார் நிறுவனங்கள் மூலம் நெய் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

அப்போது தரம் குறைந்த நெய் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்ததால், கேரள அரசின் பால்வள மேம்பாட்டு நிறுவனமான மில்மாவிடம் இருந்து நெய் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த சீசனில் மில்மாவின் பத்தனம்திட்டா உற்பத்தி மையத்தில் இருந்து 1 லட்சத்து 77 ஆயிரத்து 66 லிட்டர் நெய் சபரிமலைக்கு வினியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சபரிமலைக்கு தரம் குறைந்த கலப்பட நெய் வழங்கப்படுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பால்வள மேம்பாட்டு கழக இயக்குனர் சாலினி கோபிநாத் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில், மில்மா வழங்கிய அசல் நெய்க்கு பதிலாக, சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தரம் குறைந்த கலப்பட நெய்யை மில்மா டின்களில் நிரப்பி வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இதனை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய முறையில் சோதனை செய்யாமல் அலட்சியம் காட்டியதும் தெரியவந்துள்ளது.

இந்த முறைகேட்டில் சில மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.85.73 லட்சம் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA