Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 30 ஜூலை (ஹி.ச.)
கம்பம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் 14 வயது சிறுவன் கோமா நிலைக்கு சென்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகந்நாத் மிஸ்ரா இன்று நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நேரில் பார்வையிட்ட அவர், சிறுவனின் தற்போதைய உடல்நிலை குறித்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். மேலும் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ ஜெகந்நாத் மிஸ்ரா,
அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்.
விசாரணையில் தவறான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் உயிருடன் விளையாட யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் கோமா நிலையில் உள்ள சிறுவனுக்கு தேவையான அனைத்து உயர்தர சிகிச்சைகளையும் அளிக்க மருத்துவ நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b