மேகதாது அணை விவகாரம் - டெல்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம்
புதுடெல்லி, 30 ஜூலை (ஹி.ச.) காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில், அதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்த
Mekedatu Dam Issue – Emergency meeting of the Cauvery Water Management Authority in Delhi today.


புதுடெல்லி, 30 ஜூலை (ஹி.ச.)

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில், அதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தலைமை தாங்குகிறார். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரின் அளவு, அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் நடப்பு பருவத்தில் தண்ணீர் திறப்பு குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

குறிப்பாக, கர்நாடகா தரப்பில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி கோரும் விவகாரத்தை மீண்டும் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட உள்ளது.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் தமிழகம் தொடர்ந்து வாதிட்டு வருகிறது. எனவே இன்றைய கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b