Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 30 ஜூலை (ஹி.ச.)
தெலங்கானா ஆசிரியர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பது தனது பொறுப்பு என்றும், 2034-ம் ஆண்டு வரை தானே மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருப்பேன் என்றும் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
பின்லாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு கல்வி தொடர்பான பயணம் மேற்கொண்டு திரும்பிய ஆசிரியர்கள் குழுவினருடன் ஐதராபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கல்வித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் சில ஆசிரியர் சங்கங்கள் விமர்சனம் செய்கின்றன.
இருப்பினும், ஆசிரியர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பது அரசின் பொறுப்பு.
எனவே ஆசிரியர் சங்கங்கள் இனி தங்களது தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக அல்லாமல், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விவகாரங்களுக்காக அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்களும் எளிதாக நடைபெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் இல்லாத வகையில் வெறும் 55 நாட்களில் 11 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் நலனுக்கு இந்த அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் தெலங்கானா கல்வித்துறையை உலக நாடுகள் முன்மாதிரியாக பார்க்கும் அளவுக்கு உயர்த்த வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
மேலும், ஆசிரியர் சங்கங்களுடன் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை நேரடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்வு காணப்படும்.
அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, அவுட்சோர்சிங் பணியாளர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி தவறாமல் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA