Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான டெண்டர் நடைமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
கோவில்களில் பிரசாதம், பூக்கடை, பழக்கடை, வாகன நிறுத்துமிடம், முடி காணிக்கை உள்ளிட்ட ஒப்பந்தங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், ஒரே ஒப்பந்ததாரர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒப்பந்தங்களை பெற்று வருவதாகவும் கூறினார். இதைத் தடுக்க வெளிப்படையான புதிய டெண்டர் முறை கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார்.
புதிய நடைமுறையின்படி, அனைத்து கோவில்களுக்கும் ஒரே மாதிரியான டெண்டர் படிவங்கள் பயன்படுத்தப்படும். அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமாகவே பெறப்படும். இதுவரை குறைந்த தொகையை மேற்கோள் காட்டியவர்களுக்கு நேரடியாக டெண்டர் வழங்கப்பட்ட நிலையில், இனி மேற்கோள்கள் பெறப்பட்ட பிறகு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் நடைமுறை மாற்றப்படும் என்றார்.
மேலும், கோவில்களில் செயல்படும் அனைத்து கடைகளிலும் டிஜிட்டல் பில்லிங் முறை அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறதா, கடைகளின் வருவாய் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்கள் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.
அதேபோல், கோவில் வாகன நிறுத்துமிடங்களிலும் டிஜிட்டல் பில்லிங் முறை அமல்படுத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டண நடைமுறை கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.
தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களின் அடிப்படை வசதிகள், ஊதிய விவரங்கள் தொடர்பாக பல புகார்கள் வருவதாகக் குறிப்பிட்ட அவர், இனி அவர்களுக்கு சம்பளச் சீட்டு (Pay Slip) வழங்கப்படும். அதில் ஊதியம், பிடித்தம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெறும் என்றார்.
மேலும், டெண்டர் நடைமுறைகளில் Pre-Bid Meeting கட்டாயமாக நடத்தப்படும். தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் டெண்டரில் பங்கேற்கும் வகையில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
ஒவ்வொரு கோவிலிலும் தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் காலம் வெவ்வேறாக இருப்பதால், அனைத்தையும் ஒரே நேரத்தில் ரத்து செய்ய முடியாது.
அந்தந்த கோவில்களில் தற்போதைய ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு, புதிய டெண்டர் நடைமுறைகள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P