Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகளாவிய திறன் மையங்கள் (GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்கள், உற்பத்தித் திட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவுவதற்காக முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
இந்த முதலீடுகள் மூலம் மாநிலத்தில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை நிறுவுகிறது. இதன் மூலம் 220 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஜெர்மனியின் நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம் தனது முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்கிறது.
இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். இந்த இரண்டு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மட்டும் 1,220 உயர்தர ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia – UWA), இந்தியாவில் தனது முதல் வளாகத்தை சென்னை வேளச்சேரியில் சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் அமைக்க உள்ளது.
இது தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாக அமையவுள்ளது. இதன் மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், தென் கொரியாவின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க் (MotiveLink), காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
இந்த முதலீடுகள் சென்னை நகரை உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக மேலும் வலுப்படுத்தும் என்றும், தமிழ்நாட்டை உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளின் முன்னணி மையமாக மாற்றும் நோக்கில் முக்கிய பங்காற்றும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
மேலும், இந்த நிறுவனங்களின் முதலீடுகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்பட தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழக அரசு தொடர்ந்து வழங்கும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ