Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 30 ஜூலை (ஹி.ச)
மேகதாது அணை, காவிரி நீர், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சையில் தி.மு.க. சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் செயலற்ற நிலை, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காதது, காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது, கர்நாடக முதலமைச்சரை சந்திக்கப் போவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பரப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சை மாநகரில் தி.மு.க. சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இறுதியாக, தஞ்சையில் கூடுவோம்; விவசாய விரோத அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் அழைப்பு விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ