Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஞானபீட விருது என்பது இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மொழிக்கே வழங்கப்படும் உயரிய இலக்கிய விருது என்பதால், தமிழுக்கு அது தாமதமாக கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
1975-ல் அகிலன், 2002-ல் ஜெயகாந்தன் ஆகியோருக்குப் பிறகு, 24 ஆண்டுகள் கழித்து தற்போது தனக்கு இந்த விருது கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந்தி மொழிக்கு 12 முறையும், கன்னடம் மற்றும் மலையாளத்திற்கு தலா 6 முறையும் ஞானபீட விருது கிடைத்துள்ள நிலையில், செம்மொழியான தமிழுக்கு இதுவரை மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்திருப்பது வருத்தமளிப்பதாக கூறினார்.
இந்த விருதை தனக்கான அங்கீகாரமாக அல்லாமல், தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் காணிக்கையாக அர்ப்பணிப்பதாகவும், தன்னை உருவாக்கிய ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தலைவர்கள் மற்றும் சமூக மக்களுக்கெல்லாம் இந்த பெருமையை சமர்ப்பிப்பதாகவும் வைரமுத்து தெரிவித்தார்.
மாநில மொழி உரிமைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட வேண்டும் என்பது தமிழர்களின் உரிமையும் பெருமையும் என்றார்.
அதேநேரத்தில், இது தமிழுக்கு மட்டுமல்ல என்றும், இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு தேசிய மொழியும் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்பட்ட பின்னரே தேசிய கீதம் இடம்பெற வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் கூறினார்.
மேலும், மாநிலங்களின் மொழி உரிமையை ஒன்றிய அரசு முழுமையாக பாதுகாக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தேர்வு செய்து, அதற்கு இசையமைத்து, அரசு நிகழ்ச்சிகளில் பாடும் மரபை ஏற்படுத்திய முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவுகூருவதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ