Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 30 ஜூலை (ஹி.ச.)
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதாலும், ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் சீறிப் பாய்வதாலும் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்யும் போது நீர்வரத்து அதிகரிப்பது வழக்கம் என்றும், அப்போது பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவது வழக்கமான நடைமுறை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
நீர்வரத்து சீரான நிலைக்கு வந்த பிறகே மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறை மற்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அருவிப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b