Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)
மேகதாது விவகாரத்தில் பேச்சு நடத்த வரும் 3-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பெங்களூரு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சர் விஜயின் வருகைக்காக கர்நாடக சட்டமன்ற வளாகமான விதான் சவுதாவை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே மேகதாது அணை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அது குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் பேச்சு நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, வரும் 3-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தமிழ்நாடு அரசு தரப்பில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், சந்திப்பு குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தனக்கு கடிதம் எழுதியதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் இரு மாநில முதலமைச்சர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் விஜய் செல்லும் வழிகள் மற்றும் முதலமைச்சர்கள் சந்திக்கும் அறையை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், காவிரி ஆற்றுப்படுகைகள் மற்றும் அணைகளை முதலமைச்சர் விஜய் ஹெலிகாப்டரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் அதை ஏற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், முதலமைச்சர் விஜயின் கர்நாடகப் பயணம் குறித்து அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெளிவுபடுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN