மதுவின் தீமைகள் குறித்து டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை பலகை வைக்கக்கோரி வழக்கு - நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கௌரி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், போதிய விழிப்புணர்வு இல்லாமல் மது அருந்துவத
மதுவின் தீமைகள் குறித்து டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை பலகை வைக்கக்கோரிய வழக்கு  - நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கௌரி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், போதிய விழிப்புணர்வு இல்லாமல் மது அருந்துவதால் ஏராளமானோர் கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

சிகரெட் பாக்கெட்டுகளில் புற்றுநோய் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவது போல, மதுபானக் கடைகளிலும் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், தனது சொந்த ஊரான பண்ருட்டி பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளின் விளம்பரப் பதாகைகளில் இதுபோன்ற எச்சரிக்கை விளம்பரங்கள் எதுவும் வைக்கப்படவில்லை என்றும், இதனால் பொதுமக்கள் மதுவின் தீமைகளை உணராமல் தொடர்ந்து மது அருந்தி வருவதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தும் உத்தரவு பிறப்பித்தனர்.

Hindusthan Samachar / vidya.b