சென்சஸ் கணக்கெடுப்பில் இழிவான சாதிப் பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது – நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் வலியுறுத்தல்
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்களில் இழிவான சாதிப் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
Ravi


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்களில் இழிவான சாதிப் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அவர் தெரிவித்ததாவது:

நாடாளுமன்றத்தில்

விதி 377-ன் கீழ் பேசியபோது,

தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினருக்கு வழங்கப்படும் சாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பறையன், பஞ்சமன், புலையன் போன்ற இழிவான சாதிப் பெயர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து கவனத்தை ஈர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சொற்கள் மனிதத்தன்மையற்றவை மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தின் மீது இழிவான முத்திரையைப் பதிப்பதாகவும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர்

(கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989-ன் கீழ் இவ்வாறான இழிவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்துவது குற்றமாகக் கருதப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 1922-ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண நீதிக்கட்சி அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பறையன், பஞ்சமன் போன்ற சொற்களுக்கு பதிலாக ஆதி திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்ட வரலாற்றையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

சட்டப்படி இழிவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்துவது குற்றமாக இருக்கும் நிலையில், அரசு ஆவணங்களில் அவை தொடர்வது முரண்பாடானது என்றும், எனவே வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்களில் இத்தகைய இழிவான சாதிப் பெயர்கள் இடம்பெறாத வகையில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையருக்கு ஒன்றிய அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தகவலை அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ