Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட பிறகும், கர்நாடக அரசு அதனை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மறுப்பதுடன், அங்குள்ள அமைப்புகளையும் தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தூண்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய சூழலில் கர்நாடகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதால் தமிழகத்திற்கு எந்த பயனும் கிடைக்காது என்றும், மாறாக மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள 3,500 கனஅடி நீர் என்பது தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய மொத்த நீரில் மிகக் குறைந்த பகுதி மட்டுமே என்றும், அந்த அளவு நீரைக் கூட வழங்க கர்நாடகம் தயாராக இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், தமிழகத்தின் நலன்களை பாதுகாக்கவும், மேகதாது அணை திட்டத்தை தடுக்கவும் கர்நாடக அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தக் கூடாது என்றே தமிழக மக்களின் நிலைப்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே, ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகம் செல்லும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam