குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி - மெல்லிய சாரலுடன் கொட்டும் அருவி
தென்காசி, 31 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளி
Courtallam Aiyappa


தென்காசி, 31 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக குற்றாலம் பகுதியில் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மண், கற்கள் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்வதற்காக இன்று காலை குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே தண்ணீர் வரத்து சீரான நிலையில், அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

மேலும், மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழையானது பெய்து கொண்டிருக்கும் நிலையில், அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்தால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக குளிக்க தடை செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN