சர்வதேச புகைப்படப் போட்டியில் ரூ.12 லட்சம் பரிசு வழங்கி கௌரவிப்பு
கோவை, 31 ஜூலை (ஹி.ச.) உலகெங்கிலும் உள்ள தொழில்முறை மற்றும் அமெச்சூர் புகைப்படக் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கோவை மாவட்டத்தில் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் சார்பில் 15-வது டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி–2026 நடைபெற்றது
Honoured with a prize of Rs 12 lakh at an international photography competition.


கோவை, 31 ஜூலை (ஹி.ச.)

உலகெங்கிலும் உள்ள தொழில்முறை மற்றும் அமெச்சூர் புகைப்படக் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கோவை மாவட்டத்தில் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் சார்பில் 15-வது டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி–2026 நடைபெற்றது.

எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி. ஜெயவர்த்தனவேலுவின் நினைவாக 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சர்வதேச போட்டி,உலகம் முழுவதும் உள்ள புகைப்படக் கலைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

2026-ஆம் ஆண்டுக்கான போட்டி வனவிலங்கு உருவப்படங்கள் (Wild Portraits), இயற்கைக் காட்சிகள் (Naturescape), வான்வழிப் பார்வை (Aerial View) ஆகிய மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது.

மே 1 முதல் ஜூன் 30 வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை இந்தியாவின் ராகுல் சச்தேவ், கல்யாண் வர்மா மற்றும் கென்யாவின் அந்தோனி ஓச்சியெங் ஒன்யாங்கோ உள்ளிட்ட நடுவர்கள் மதிப்பீடு செய்தனர்.

37 நாடுகளைச் சேர்ந்த 2,334 புகைப்படக் கலைஞர்கள் அனுப்பிய 12,278 புகைப்படங்கள் போட்டியில் இடம்பெற்றன.

இந்த சர்வதேச புகைப்படப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு மொத்தம் ரூ.12 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

கஸ்தூரி சீனிவாசன் கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில், எல்.எம்.டபிள்யூ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

போட்டியில் தேர்வான சிறந்த புகைப்படங்களின் கண்காட்சி ஆகஸ்ட் 5 வரை பொதுமக்கள் பார்வைக்காக நடைபெறுகிறது.

Hindusthan Samachar / vidya.b