ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – கேரள இளைஞர் கைது
கிருஷ்ணகிரி, 31 ஜூலை (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிப்காட் காவல் எல்லைக்கு உட்பட்ட ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், சொகுசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ''மெத்தம்பெட்டமைன்'' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட
Hosur


கிருஷ்ணகிரி, 31 ஜூலை (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிப்காட் காவல் எல்லைக்கு உட்பட்ட ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், சொகுசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'மெத்தம்பெட்டமைன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடி வழியாக, போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்த சோதனைச் சாவடியில், காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த 'ஜிகான் டிராவல்ஸ்' (Jihan Travels) என்ற தனியார் சொகுசுப் பேருந்தை நிறுத்தி காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். பேருந்தில் இருந்த பயணிகளின் உடமைகளை பரிசோதித்த போது, அதில் பயணித்த ஒரு இளைஞரின் நடவடிக்கைகளில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரைப் பிடித்து விசாரித்து, அவரது உடமைகளை சோதனை செய்ததில், அவர் சுமார் 150 கிராம் எடை கொண்ட 'மெத்தம்பெட்டமைன்' (Methamphetamine) என்ற அதிபயங்கர போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி அடுத்த இடைக்கொச்சி (Eadakochi), நாலகண்டத்தில் வீட்டைச் சேர்ந்த, கிளைவர்ட் சேவியர் அந்தோணி (23) என்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 150 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு சுமார் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் கிளைவர்ட் சேவியர் அந்தோணியிடம், இந்த போதைப்பொருளை எங்கிருந்து வாங்கி வருகிறார்? பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்டதா? என்பது குறித்து சிப்காட் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN