Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 31 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் சண்முகம்,
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளதாக வெளியாகியுள்ள தகவலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட முடியாது என்று தெளிவுபடுத்தியிருப்பது, தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து தெரிவித்த எதிர்ப்பின் விளைவாக ஏற்பட்ட நிலைப்பாட்டு மாற்றம் என அவர் கூறினார்.
சர்வதேச அளவில் கூட மேல்பகுதி மாநிலங்கள் கீழ்பகுதி மாநிலங்களின் நீர்வள உரிமையை பாதிக்கக் கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை என்றும், அதனை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடக முதல்வரைச் சந்திக்க தமிழக முதலமைச்சர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்தப் பயணத்தால் எந்தப் பயனும் ஏற்படாது என்றார்.
கர்நாடக அரசு தற்போது கூட 3,500 கனஅடி (cusecs) தண்ணீரை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்ற தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவை ஏற்கனவே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா செல்வது தேவையற்ற பயணம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படி அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் சண்முகம் எச்சரித்தார்.
தமிழக விவசாயிகளின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, கர்நாடக பயணத்தை முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிபிஐ(எம்) சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam