Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 31 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தி, கர்நாடக பாஜகவினர் பெங்களூரு அருகே உள்ள கிருஷ்ண்ராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு–கர்நாடகா இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் கர்நாடக அரசு, நீர்ப்பற்றாக்குறையை காரணம் காட்டி தண்ணீர் திறப்பதில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த
28-ந்தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், தமிழகத்தின் தரப்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம், மொத்தம் சுமார் 4½ டி.எம்.சி. தண்ணீரை பிலிகுண்டுலு எல்லைப் பகுதியில் திறந்துவிட கர்நாடகத்திற்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.
ஆனால், இந்த பரிந்துரையை ஏற்க மறுத்துள்ள கர்நாடக அரசு, இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளது. அதன்படி, மேலாண்மை ஆணையத்தின் கவனத்திற்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் முயற்சியையும் கர்நாடக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக பாஜகவினர் கிருஷ்ண்ராஜசாகர் அணை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA