Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 31 ஜூலை (ஹி.ச.)
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கொட்டித்தீர்க்கும் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எர்ணாகுளம், வயநாடு, காசர்கோடு, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அங்கன்வாடிகள், பள்ளிகள், மதரஸாக்கள், பயிற்சி மையங்கள், சிறப்பு வகுப்புகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ள தங்கும் வசதி கொண்ட (ரெசிடென்ஷியல்) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள், பொதுத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் காசர்கோடு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், சில இடங்களில் மரங்கள் சாய்ந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிடும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA