Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 31 ஜூலை (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த மாணவியை கரூர் பேருந்து நிலையத்தில் கரூர் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
திருச்சியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவரின் 15 வயது மகளான இவர், கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கண்ணம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டது. பின்னர், மாணவியின் டிபன் பாக்ஸ் மட்டும் வீட்டு வாசலில் கிடந்த நிலையில், பள்ளிப் புத்தகப்பையுடன் மாணவி மாயமானார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், உறவினர் வீடு முதல் பாப்பம்பட்டி பிரிவு வரை உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், மாணவியின் உறவினர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி, காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், காணாமல் போன மாணவி கரூர் பேருந்து நிலையத்தில் இருப்பதை கரூர் போலீசார் கண்டறிந்து, அவரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரை சூலூர் போலீசாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam