Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)
காவிரி நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது பிரதமர் நரேந்திர மோடியின் கடமையாகும். தேவையின்றி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இந்த விவகாரத்தில் இழுப்பது நியாயமல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
நேற்று (ஜூலை 30) செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னை வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு எதிரானது என்றும், கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது என்றும் கூறுவாரா? அப்படி கூறினால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறத் தயார் எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர்,
தமிழ்நாடு–கர்நாடக இடையிலான காவிரி நீர்ப் பிரச்சினையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்தி, தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடச் செய்வது பிரதமர் நரேந்திர மோடியின் பொறுப்பும் கடமையும் எனக் கூறினார்.
மேலும், இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவாக இருந்ததால் தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீர் வராத நிலையில், கர்நாடக அரசு தினமும் 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவை செயல்படுத்த இரு மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ், பிரதமர் மோடியையும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும் நேரடியாக சந்தித்து, தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத்தான் தமிழக மக்கள் அவரிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அதற்கு மாறாக, தேவையின்றி ராகுல் காந்தியை இந்த விவகாரத்தில் இழுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. அவர் பிரதமராகும் போது அந்த கோரிக்கையை முன்வைக்கலாம் என்றும் அவர் விமர்சித்தார்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு காங்கிரஸின் உறுதியான நிலைப்பாடு என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் மாணிக்கம் தாகூர் கூறினார்.
தமிழ்நாட்டின் உரிமைக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. எனவே, அன்புமணி அரசியலைத் தவிர்த்து, மத்திய அரசில் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்திற்கு நீர் கிடைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ