Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 ஜூலை (ஹி.ச)
தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக பொதுமக்களும், பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது அதிர்ச்சியளிப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக், குளோரின் மற்றும் மருந்து நெடி வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதாகவும், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் பாலில் மரவள்ளிக்கிழங்கு மாவு, அகர் அகர் உள்ளிட்ட பொருட்களைக் கலந்து கலப்படம் செய்வதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் உடல்நலனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இத்தகைய குற்றச்சாட்டுகளை அரசு தீவிரமாகக் கவனிக்க வேண்டும் என்றும், முறைகேடுகளைத் தடுக்காமல் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
தரக்கட்டுப்பாட்டு சோதனைகளை முறையாக மேற்கொள்ளாமல் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, ஆவின் பாலில் ரசாயன நெடி தொடர்பான புகார்கள் மற்றும் சேத்தியாதோப்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் கலப்பட முறைகேடு ஆகிய இரு விவகாரங்களையும் விசாரிக்க உடனடியாக உயர்மட்டக் குழுவை அமைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்களின் உடல்நலனுடன் விளையாடுவதாகக் கூறப்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தூய்மையான ஆவின் பால் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைதளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ