Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 ஜூலை (ஹி.ச)
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, பிரதமர் பள்ளிகள் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,
கேரளாவில் எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் பள்ளிகள் திட்டத்தை கடுமையாக எதிர்த்து, கல்வியின் காவிமயமாக்கல் என்றும், மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கை என்றும் விமர்சித்த காங்கிரஸ், ஆட்சிக்கு வந்த பிறகு அதே திட்டத்தை ஏற்றுக்கொண்டது அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களிடம் தவறான கருத்துகளைப் பரப்பிய காங்கிரஸ், ஆட்சியைப் பிடித்தவுடன் தனது நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக்கொண்டதாகவும், கொள்கையை விட அதிகாரமும் நிதியும் மட்டுமே அக்கட்சிக்கு முக்கியம் என்பதை இது நிரூபிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டிலும் பிரதமர் பள்ளிகள் திட்டத்தை எதிர்த்து வரும் காங்கிரஸ், கேரளாவில் அதே திட்டத்தை ஆதரிப்பது அரசியல் சந்தர்ப்பவாதத்தின் வெளிப்பாடாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் அரசியல் லாபத்திற்காக பாதிக்கப்படக் கூடாது என்றும் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் பள்ளிகள் திட்டம் மூலம் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, தரமான கல்வி மற்றும் மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழல் உருவாக்கப்படுவதாகவும், தமிழ் மொழியே பயிற்று மொழியாகத் தொடரும் என்பதை மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நோக்கத்திற்காக கல்வித் திட்டங்களை எதிர்ப்பதை விட, மாணவர்களின் நலனை முன்னிறுத்தி செயல்பட வேண்டும் என்றும், காங்கிரஸின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள் என்றும் நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ