Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 31 ஜூலை (ஹி.ச.)
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்டு 1) ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டம் போகபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ரூ.17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
போகபுரத்தில் ரூ.5,640 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், பிராந்திய வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்த நவீன கிரீன்பீல்ட் விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டிட வடிவமைப்பு, ஆந்திரப் பிரதேசத்தின் பாரம்பரிய ‘சுட்டிலு’ குடிசைகள், அரக்கு பள்ளத்தாக்கு மற்றும் பறக்கும் மீன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டுகிறார்.
இதன்பிறகு கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லும் பிரதமர், அங்குள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையமான ‘விவேக ஸ்மாரகா’வை திறந்து வைக்கிறார்.
1892-ம் ஆண்டு நவம்பர் மாதம் சுவாமி விவேகானந்தர் மைசூருக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையை நினைவுகூரும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பயணத்தின்படி, நாளை காலை 11 மணியளவில் போகபுரம் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனைய கட்டிடத்தை அவர் பார்வையிடுகிறார்.
காலை 11.30 மணியளவில் விமான நிலையத்தை திறந்து வைத்து, வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் மைசூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் ‘விவேக ஸ்மாரகா’ திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA