Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 31 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழக அரசு உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 151 முதுநிலை மருத்துவ இடங்கள் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிட்டதாகவும், அதில் 50 சதவீத இடங்கள் மீண்டும் கிடைக்கும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு வெற்றியாகக் கொண்டாடுவது ஏற்க முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அரசு மருத்துவர்களின் 50 சதவீத இடஒதுக்கீடு, நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்ததாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.
அந்த உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்த வழக்கில் தமிழக அரசு வலுவான சட்ட வாதங்களை முன்வைக்கத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், நீட் தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பை தாமதப்படுத்தியதன் மூலம், காலியாக இருந்த அரசு மருத்துவர்களுக்கான இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்றும் சூழல் உருவாக்கப்பட்டதாகவும், இதை நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தி முழு இடங்களையும் மீட்டிருக்க வேண்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
151 இடங்களில் பாதி இடங்கள் மட்டுமே, அதுவும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் கிடைக்கும் என்ற நிலையை வெற்றியாகச் சித்தரிப்பது தவறானது என்றும், இதனால் தமிழக அரசு மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பும், எதிர்கால பொது சுகாதார சேவையும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, அரசு மருத்துவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P