தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணியாற்றி வரும் சுமார் 700 உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் பணியில் மின்சார வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நீண்ட நாட்களாக காலியாக உள்ள உதவி செயற்பொற
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணியாற்றி வரும் சுமார் 700 உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் பணியில் மின்சார வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நீண்ட நாட்களாக காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்சார வாரியத்தில் பல்வேறு அனல் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள் மற்றும் பகிர்மான வட்டங்களில் உதவி பொறியாளர்களாக பணியாற்றி வருபவர்கள் பல ஆண்டுகளாக பதவி உயர்வு இன்றி காத்திருந்து வருகின்றனர்.

இதனால் நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்படுவதோடு, பணியாளர்களிடையே மன உளைச்சலும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், தகுதியான உதவி பொறியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்க வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதவி உயர்வு மூலம் மின் வாரியத்தின் செயல்பாடுகள் மேலும் வேகமடையும் என்பதுடன், பணியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்த திருப்தியும் ஏற்படும் என தொழிற்சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b