ராகுல் காந்தி – முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்திப்புக்கு வாய்ப்பு இல்லை - மாணிக் தாகூர்
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகையின்போது, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர், வி
மாணிக்கம் தாகூர்


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகையின்போது, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி சென்னை வருவதாகவும், அவரது பயண விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

ராகுல் காந்தி முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திப்பாரா என்ற கேள்விக்கு,

அவர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டுமே வருவதாக பதிலளித்தார்.

இதன் மூலம் இருவருக்கும் இடையிலான சந்திப்புக்கு வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்தது.

மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய மாணிக் தாகூர், கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் கர்நாடக முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவது தவறல்ல என்றும், முந்தைய முதலமைச்சர்களும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர் என்றும் கூறினார்.

பாமக தலைவர் அன்புமணியை விமர்சித்த அவர், என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று சென்னையில் பேசுவதற்குப் பதிலாக,

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக தெரிவிக்கும் தைரியம் அன்புமணிக்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமே; பிரதமர் அல்ல. எனவே மேகதாது அணை விவகாரத்தில் அதிகாரம் கொண்ட பிரதமரிடமே அன்புமணி வலியுறுத்த வேண்டும் என்றும், தேவையில்லாமல் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

அன்புமணி தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை குறிவைத்து விமர்சித்தால், காங்கிரஸும் அதற்கு தக்க பதிலடி அளிக்கும் என்றும் மாணிக் தாகூர் எச்சரித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam